Monday, 23 April 2007

ஒரு கேள்வியும்-பதிலும்

திரு. அசுரன் என்பவர் தன்னுடைய போர் பரை என்னும் வலைத்தளத்தில் கீழ் காணும் கேள்வியைக் கேட்டிருந்தார். அதற்கு நான் அளித்த பதிலே இங்கு காணும் பதிவு.


வர்ணாஸ்ரம தர்மம் எந்த வகையில் சிறந்த் சமூக அமைப்பு?

எந்த ஒரு சமூக ஏற்பாடுமே இதுதான் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய மிகச்சிறந்த ஏற்பாடு என்று எவரும் சொல்ல முடியாது. சமுக மக்களின் மன நிலை, வாழ்வு நிலகளுக்கேற்ப சமுதாயச்சட்டங்களும் மாறிக் கொண்டே இருக்கும். இன்றைக்கு நாம் அனுசரித்துக் கொண்டிருக்கும் சமூக ஏற்பாட்டுச்சட்டங்கள், மேதை அம்பேத்காரும் மற்ற வல்லுனர்களும் சேர்ந்து இயற்றியதுதான். அனால் நம் காலத்திலேயே அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டோம்; இன்னும் மாறும்.
மேலும், சில நூற்றாண்டுகளுக்குபின் வரக்கூடிய சமுதாய மக்கள் இதை எள்ளி நகையாடும் நிலையும் ஏற்படலாம். எனவே, நாம் நடத்திக் கொண்டிருக்கும் சமுக வாழ்வுதான் உன்னதமானது, நாமே பகுத்தறிவுப்பகலவர்கள்; நம் முன்னோர்கள் வாழத்தெரியாத முட்டாள்கள், அயோக்கியர்கள், காட்டு மிராண்டிகள் (நாம் அவர்கள் 'ஜீன்'களிலிருந்து வந்தவர்கள்தாம்) என்று சொல்லிக் கொண்டிருப்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா?
அன்றைக்கிருந்த அந்த ஏற்பாடு சிறந்ததா இல்லையா என்று இன்றைக்கு நாம் ஆராயமுடியாது. அது அன்றைக்கு வாழ்ந்த மக்கள் 'சிறந்தது' என்று ஏற்றுக்கொண்டிருந்ததாலேயே அதை அனுசரித்துப் பலகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். நம் நோக்கில் அது சரியில்லை; தள்ளி வைத்துவிட்டு புதிய முறைகளைப் பரீட்சித்துப் பார்க்கிறோம்.
பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பல கோடி மக்கள் வாழ்ந்து பார்த்தவற்றையெல்லாம் நாம் இன்று 'அபத்தம்' என்று மகா மேதாவியாக நம்மை நாமே கருதிக் கொண்டு எள்ளுவதும், அடுத்த ஆயிரம் வருடங்களுக்கான உன்னதமான ஒரு சமூக ஏற்பாட்டை நாம் சிருஷ்ட்டி செய்து வைத்துவிட்டது போல் பேசித்திரிவதும் சாதாரண அறிவிற்ககே பொருந்தாது; பகுத்தறிவிற்கு?
ஒற்றைப் பார்வையால் நமது பழமையான சமூகத்தை அளந்துவிட முடியாது; அது வெறுப்பிற்கு உதவலாம்; ஆராய்ச்சிக்கும் உண்மை அறிவதற்கும் உதவாது.

குழிப்பிள்ளையைத் தோண்டி எழவு கொண்டாடுவது என்பது இதுதான்.

கண்ணன்.

March 22, 2007 3:18 AM